Monday, July 14, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்பும் சுபான்ஷு! எங்கு எப்போது தரையிறங்குகிறது ‘டிராகன்?’

14 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பல்வேறு ஆய்வுகளை முடித்துள்ளனர். இந்நிலையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு இன்று திரும்புகின்றனர். இதனை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘Palgaon 9’ ராக்கெட் மூலம், ’டிராகன்’ விண்கலம் கடந்த மாதம் 25ம் தேதி மதியம் 12 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கேப்டன் சுபான்ஷு சுக்லா-வால் இந்தியாவுக்கு கிடைத்தது. சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்கள் விண்வெளிக்கு சென்றனர். ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் 28 மணிநேரம் பயணத்தை முடித்து வெற்றிகரமாக ஜூன் 26ஆம் தேதி விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே ஏழு வீரர்கள் ஆய்யுகளில் ஈடுபட்டிருந்த நிலையில், புதிதாக வந்த வீரர்களுக்கு வெல்கம் டிரிங்க் கொடுக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜூலை 10ம் தேதி பூமிக்கு திரும்பும் பணிகள் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இது சற்று தள்ளிப்போனது.

சுபான்ஷு சுக்லா குழு ஆய்வுகளை முடித்துக் கொண்டு இன்று பூமிக்கு புறப்படுகிறார். முன்னதாக விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி தெரிகிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக அவர் கூறியிருந்தார். இன்று மாலை 4.45 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ‘டிராகன்’ விண்கலம் தனியாகப் பிரிக்கப்பட்டு, பூமியை நோக்கி தன் பயணத்தை தொடங்குகிறது. சுமார் 24 மணி நேரம் பயணித்து நாளை பிற்பகல் 3 மணியளவில் வட அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய கலிபோர்னியா கடற்கரையில் ’டிராகன்’ விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news