தாய், மனைவிக்கு கோவில் கட்டிய சப்இன்ஸ்பெக்டர்

322
Advertisement

இறந்துபோன தாய்க்கும் மனைவிக்கும் சிலை வடித்து கோவில் அமைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் சப்இன்ஸ்பெக்டர்.

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் மதன்மோகன். 78 வயதான இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றுவிட்டார்.

29 ஆண்டுக்குமுன்பு இவருக்கும் மீனாட்சியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. 69 வயதான மனைவி மீனாட்சியம்மாள் மூச்சுத் திணறல் காரணமாக 2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
மனைவியின் முதல் ஆண்டு நினைவு நாளின்போது மனைவிக்கு சிலை வைக்க விரும்பியுள்ளார். அப்போது தன் தாய்க்கும் சிலை வைக்க முடிவெடுத்தார். இவரின் தாய் கமலம்மாள் 10 ஆண்டுகளுக்குமுன்பு மறைந்துவிட்டார்.

தற்போது தாய், மனைவி இருவருக்கும் தனது வீட்டை ஒட்டி 225 சதுர அடி அளவில் கோவில் கட்டினார். அங்கு அருகருகே தாய், மனைவி சிலைகளை வைத்துள்ளார்.

இரண்டு சிலைகளுக்கும் பூஜைசெய்வதற்காக இரண்டு பூசாரிகளையும் நியமித்துள்ளார். மேலும், 20 ஆண்டுகளுக்குமுன்பு இறந்துபோன தன் தந்தையின் சிலையை வடிக்கவும் ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதுபற்றிக் கூறியுள்ள எம்ஜிஆர் மதன்மோகன், ”எங்கள் குடும்பத்தில் 14 பேரில் ஒருவனாக நான் பிறந்தேன். என் தந்தை எனக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்.
நாங்கள் பெரிய குடும்பமாக இருந்தாலும் என் அம்மா அனைவரையும் சமமாகவே வளர்த்தார். அதையே என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்தேன். நான் சிறந்த மனிதனாக உயர்வதற்கு என் தாய்தான் காரணம்.”

எங்களுக்கு 5 மகள்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் காவல்துறையில் 37 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்காகவும் என் குழந்தைகளுக்காகவும் என் மனைவி அர்ப்பணித்துக்கொண்டாள்.

என் மனைவியின் இழப்பைத் தற்போது உணர்கிறேன். எனவே, மனைவியின் முதல் நினைவு நாளில் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளேன்.

நான் மட்டுமல்ல, என் குடும்பத்தினரும் இங்கு வணங்கவும் பிரார்த்தனை செய்யும் வகையிலும் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளேன். என் தாய் மீதும் மனைவி மீதும் நான் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் பொதுமக்களுக்கு இந்தக் கோவில் நினைவூட்டும்” என்று கூறியுள்ளார்.

பாசக்காரக் கணவன், பாசக்காரத் தந்தை. பாசக்கார மகன் இந்த சப்இன்ஸ்பெக்டர் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன மக்களே…