சேலம் அருகே ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை தட்டிக்கேட்கவில்லை எனக்கூறி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறை பேருந்து நிறுத்தத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவி அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து நடத்துநர் திருமுருகனிடம் மாணவி கூறியுள்ளார். ஆனால், அவர் அந்த இளைஞரை கண்டிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து, மாணவி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் பேருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தபோது, அங்கு நின்றிருந்த மாணவியின் உறவினர்கள் அந்த இளைஞரை தேடியுள்ளனர். ஆனால், அவரை காணவில்லை.
இதையடுத்து பாலியல் அத்துமீறல் குறித்து தட்டிக்கேட்காத ஓட்டுநர் தனபால் மற்றும் நடத்துநர் திருமுருகன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
