கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றைத் தொடர்ச்சியாகப்
பயன்படுத்தும்போது கண்கள் பாதிக்கப்படுகின்றன. எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு விழிப்படலத்தைப்
பாதிப்பதே இதற்குக் காரணம்..
கண்கள் பாதிப்படைவது மட்டுமன்றி, இலவசப் பரிசாகத் தலைவலி, கண்வலி
போன்ற உபாதைகளும் உண்டாகின்றன.
சாதாரணமாக, நாம் ஒரு நிமிடத்துக்குள் பலமுறை கண்களை சிமிட்டுவோம்.
ஆனால், செல்போன், கம்யூட்டர் போன்வற்றைப் பயன்படுத்தும்போது
கண்ணிமைக்க மறந்துவிடுகிறோம். இரண்டு மூன்று நிமிடங்கள்கூடக்
கண்ணிமைக்காமல் தொடர்ந்து கூர்ந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்போம்.
இப்படி நீண்டநேரம் கண்ணிமைக்காமல் இதுபோன்ற எலக்ட்ரானிக்
சாதனங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால், விழி வெண்படலத்துக்கு
மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைகிறது. இதனால், கண் எரிச்சல்,
கண்களிலிருந்து நீர்வடிதல், அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது.
இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ள இத்தகைய எலக்ட்ரானிக்
சாதனங்களை 20 சென்டிமீட்டர் தொலைவில் வைத்துப் பயன்படுத்துவது சிறந்தது.
இவற்றை அதிக வெளிச்சத்திலோ குறைந்த வெளிச்சத்திலோ வைத்துப்
பயன்படுத்த வேண்டும். 30 நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து பார்க்காமல்
சிறிது இடைவெளிவிட்டுப் பசுமையான இடங்களைப் பார்க்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டரின் திரை, கண்பார்வைக் கோட்டுக்குக்கீழே இருக்கும்படிப்
பார்த்துக்கொள்ளலாம்.
ஏசி பயன்படுத்தினால், அது முகத்தில் படும்படி அமரக்கூடாது. மேஜை
விளக்குகளைப் பயன்படுத்தலாம்.
உடம்பின் எல்லா பாகங்களும் ஆரோக்கியமாக இருந்தாலும், கண்
பார்வைக் கோளாறு ஏற்பட்டால் அவதிதான். தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி நாம் வளரும்போது நமது ஆரோக்கியம், கண் பார்வை
பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பம் நமது வளர்ச்சிக்குத்தானே தவிர, அழிவுக்கல்ல என்பதை
நினைவில்கொண்டு செயல்பட வேண்டும்.