கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகேயுள்ள காஞ்சிரக்காடு பகுதியில் தெருநாய்கள் கூட்டமாக திரிந்து, ஒரு இடத்தில் மண்ணை தோண்டுவதை கண்டுள்ள பொதுமக்கள், சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்த போது, மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் பெரும்பாவூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையை தொடர்ந்து மேற்கொண்ட போலீசாருக்கு, குழந்தையை புதைத்தது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் என தெரியவந்தது. மஜ்ரு ஷேக் (33) மற்றும் அவரது மனைவி ஷீலா கார்த்தூன் (32) ஆகியோர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெரும்பாவூருக்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
ஜூலை 24-ம் தேதி ஷீலா கார்த்தூன் வீட்டிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால், குழந்தையை வளர்க்க மனமில்லாததால், பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த தம்பதி குழந்தையை கொன்று, வீட்டின் முன்புள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.