அதிர்ஷ்டப் பரிசுச் சீட்டில் 1 கோடி ரூபாய் பரிசுபெற்றவர் தனக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையை அணுகியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், கிழக்கு பர்தமான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஹீரா. ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் சமீபத்தில் 270 ரூபாய்க்கு லாட்டரிச் சீட்டு வாங்கினார். அதிர்ஷ்டம் இந்த முறை ஹீராவைத் தேடிவந்தது.
ஒரே இரவில் ஒரு கோடி ரூபாய்ப் பரிசுத் தொகைக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் மிகுந்த உற்சாகமடைந்தார்.
அதேசமயம் பயமும் அவரைத் தேடிவந்தது.
தனது பரிசுச் சீட்டை யாரும் திருடிவிடுவார்களோ, தொலைந்துவிடுமோ என்று பயந்தார். உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று ஆலோசனை கேட்டதுடன், தனக்குப் பாதுகாப்பு கேட்டுப் புகார்செய்தார்.
அதைத் தொடர்ந்து ஷேக் ஹீராவைப் போலீசார் பத்திரமாக அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அவரது வீட்டைச் சுற்றிப் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதுபற்றிக் கூறிய ஷேக் ஹீரா,
எனது பணப் பிரச்சினை தீர்ந்துவிட்டது. எனது அம்மா நோய்வாய்ப்பட்டுள்ளார். இந்தப் பணத்தைக்கொண்டு அம்மாவுக்கு சிகிக்சை கிடைக்கச் செய்வேன். அம்மாவுக்காக ஒரு வீட்டையும் கட்டிக்கொடுப்பேன் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
லாட்டரிச் சீட்டில் பரிசு பெற்றவர் காவல்துறை பாதுகாப்பு கேட்டு மனு அளித்தது சமூக வலைத்தளவாசிகளை வியக்க வைத்துவிட்டது.