Saturday, January 18, 2025

திருடப்பட்ட ஐன்ஸ்டீன் மூளை 240 துண்டாக்கப்பட்டது ஏன்? சினிமாவை மிஞ்சும் Brain Heist

இவன் என்னமோ பெரிய ஐன்ஸ்டீன் மாதிரி பேசுறான்? அவ்ளோ பெரிய மூளைக்காரனா இவன்? என்றுதான் அறிவாகப் பேசுபவர்களை இன்றும் சொல்வார்கள்.

E= mc2 (square) என்ற ரிலேட்டிவிட்டி தியரி இவருடையது தான்.

ஐன்ஸ்டீன் என ஒரு அதீத புத்திசாலி இல்லாவிட்டால் இந்த உலகம் இப்போதைய அறிவியல் புரட்சியை எட்ட இன்னும் ஒரு 300 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எந்நேரமும் ஸ்வெட்டரில் பேனாவை பேட்ஜாகக் குத்திக் கொண்டு அலையும் ஐன்ஸ்டீன் தனது அசாத்திய மூளையில் தோன்றுவதை எல்லாம் உடனுக்குடன் குறிப்பெடுத்தும் கொள்வார்.

இவருக்கு மட்டும் மூளையைக் கடவுள் கொஞ்சம் Extra-வா வைச்சுட்டாரோ? என்று கூட சமகால விஞ்ஞானிகளையே அதிக பொறாமை கொள்ள வைத்தவர் அவர். அப்படி அவர் மூளை மீது பலரும் கண் வைத்தனர்.

கண்வைத்தவர்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அதைக் களவாடியவர் ஒருவர்தான். அதை மறு களவாடலுக்கு விடாமல் அவர் காப்பாற்ற மேற்கொண்ட யுக்திகள் எல்லாம் சினிமாவின் பரபரப்புக் காட்சிகளையும் மிஞ்சும்.

70 ஆண்டுகளுக்கு முன் உலகை அதிர வைத்தது அந்த செய்தி.

‘ஐன்ஸ்டீன் மரணமடைந்தார்’ . . .

-என அறிந்து அதிர்ந்தது உலகம். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் சோகத்தில் இருந்து மீளும் முன் அடுத்ததொரு அதிர்ச்சி செய்தியும் வந்தது.

‘ஐன்ஸ்டீனின் மூளையைக் காணவில்லை’. .

என்று மீளதிர்ச்சி தந்தது நியூயார்க் டைம்ஸின் துப்பறிவு செய்தியாளர் குழு.

அந்த மூளை திருடப்படும் என்பதை யாருமே யோசிக்கவில்லை. ஐன்ஸ்டீனைத் தவிர. ஆம், அந்த மூளைக்காரர் அதையும் கணித்திருந்தார்.

அதனால், ‘என்னுடைய உடலை எரித்து அதன் சாம்பல் கூட யாருக்கும் கிடைக்காமல் செய்துவிட வேண்டும்’ என்று தனது இறுதிக்கால ஆசையை எழுதியும் வைத்துவிட்டுத்தான் சென்றிருந்தார் அந்த மனிதர்.

அதை யார் திருடினார் தெரியுமா? ஐன்ஸ்டீனின் பாடியைப் போஸ்ட்மார்டம் செய்தபோது உடன் இருந்த பிரின்ஸ்டன் மருத்துவமனையின் பாதாலஜிஸ்ட் Dr. Thomas Stoltz Harvey.

பிரேதப் பரிசோதனையின் போது மூளையை மட்டும் திருடிவிட்டு பாடியை பேக் செய்து குடும்பத்திடம் சாமர்த்தியமாகக் கொடுத்துவிட்டார்.

மூளைத் திருட்டுப் புகாரில் முதன்மைக் குற்றவாளி டாக்டர் தாமஸை பிரின்ஸ்டன் மருத்துவமனை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தது. திருடிய மூளையையும் மருத்துவமனையில் இருந்து கையோடு எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதனை மீண்டும் திருட முயன்ற விஞ்ஞானிகள் ஒருபுறமும், அதைக் காப்பாற்ற முயன்ற காவல்துறை மறுபுறமும் என ஆளாளுக்கு ஐன்ஸ்டீன் மூளையை வலைவீசித் தேடிக் கொண்டிருந்தனர்.

ஆனால், யாருமே எதிர்பாராமல் திடீரென சண்டைக்காரர் காலிலேயே விழுந்து சரணடைந்தார் டாக்டர் தாமஸ். ஐன்ஸ்டீனின் குடும்பத்திடம் மூளையைத் தானே வைத்துக் கொள்ள உரிமையும் கோரினார்.

அதற்காக அவர் 2 நிபந்தனைகளைத் தான் உயிருக்கும் மேலாக பின்பற்றுவதாகச் சொல்லி சத்தியமும் செய்து கொடுத்தார். அது, அந்த மூளையை கொள்ளைக் கும்பலிடம் இருந்து எப்பாடுபட்டாவது காப்பாற்றுவது.

மற்றொன்று, அந்த மூளையை ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துவது என்று சொல்லி அனுமதி பெற்றார்.

அன்று முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தலைகீழானது அவர் வாழ்க்கை. இந்தத் தலைமறைவு வாழ்க்கையில் அவர் இழந்தவை ஏராளம். அதில் முக்கியமானது அவரது 3 மனைவிகளை இழந்ததுதான்.

வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாமல் பல துன்பங்களை அனுபவித்தார். ஐன்ஸ்டீனின் மூளையைக் கைப்பற்ற முயன்றவர்களிடம் இருந்து பலமுறை தப்பிச் சென்றார்.

பதப்படுத்திய ஐன்ஸ்டீனின் மூளையை மயோனைஸ் ஜார், காரின் ட்ரங்குப் பெட்டி, கிட்சனின் அட்டைப் பெட்டி, கோழிகள் அடைத்து வைக்கும் கூண்டு ஆகியவற்றுக்குள் எல்லாம் ஒளித்து வைத்து காப்பாற்றினார்.

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டுகளாக வெட்டினார்.அதனை ஆய்வு செய்ததில் ஐன்ஸ்டீன் மூளையில் நியூரான், க்ளியல் ஆகிய இரண்டும் சராசரி விகிதத்தை விட அதிகளவு இருந்ததைக் கண்டுபிடித்தார்.

டாக்டர் தாமஸ் 80 வயதை அடைந்ததும், பிளாஸ்டிக் ஃபேக்டரியில் நைட் ஸிஃப்டில் பணியாற்றினார். அவர் தன்னுடன் வசித்த பல்கலைக்கழக மாணவனின் பீரோவில் கூட ஐன்ஸ்டீனின் மூளைத் துண்டுகளை ஒளித்து வைத்தார்.

தான் மரணத்தைத் தழுவும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தபோதுதான் அவர் ஐன்ஸ்டீனின் மூளையை விட்டுக் கொடுக்க சம்மதித்தார்.

அதை அவர் முன்னர் பணியாற்றிய அதே பிரின்ஸ்டன் மருத்துவமனையின் மற்றொரு மருத்துவரிடம் ஆய்வுக்குக் கொடுத்துவிட்டு உயிரைவிட்டார்.

அந்த டாக்டர் X யார் என்பது இதுவரை மர்மம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூளையைக் காப்பாற்றி வரும் டாக்டர் X-ம் தற்போது அதைத் தகுதி வாய்ந்த ஆய்வாளர்களிடம் கொடுக்க ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறாராம். . .

ஐன்ஸ்டீன் உயிரிழந்தாலும் அவரது மூளைக்கு மட்டும் ஓய்வே இல்லை. இறந்தும் வீணாகாமல் இன்னமும் பயன்படுகிறது.

Latest news