ஓசூரில், ஓய்வுகால பணப்பலன்கள் விண்ணப்பத்திற்கு லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், நாகராஜன் என்பவர் முத்திரை பணியாளராக பணி செய்து வருகிறார். இவர் வயது மூப்பின் காரணமாக வரும் 30ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், ஓய்வுகால பணப்பலன்களுக்காக ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வனை அணுகியுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வன் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் நாகராஜன் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்,
ரசாயனம் தடவப்பட்ட 30 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, நாகராஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கியுள்ளர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த பணத்தை தமிழ்ச்செல்வனிடம் நாகராஜன் கொடுத்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பணத்தை வாங்கிய தமிழ்ச்செல்வனை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணம் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.