தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது மீண்டும் களப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, தனது கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியைச் சந்தித்தது திமுகவினர் மத்தியில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில் தான், தஞ்சாவூரில் நடைபெற்ற பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வையும், முதலமைச்சர் விஜய்யையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது” என்று அவர் கூறியது இப்போது அரசியல் அரங்கில் ஒரு மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக ஒருபோதும் சிதறாது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், திமுகவினர் யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை என்று தொண்டர்களுக்கு தைரியம் அளித்தார். “நாங்கள் அனைத்துக் களப்பணிகளையும் செய்தும் தோல்வி அடைந்தோம், ஆனால் அவர்கள் எந்தப் பணியுமே செய்யாமல் வெற்றி பெற்றுள்ளனர்” என்று ஆதங்கப்பட்ட அவர், சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலமாகவே ஒரு மாயையான பிம்பத்தை உருவாக்கி தவெக வெற்றி பெற்றுள்ளதைக் கிண்டல் செய்தார்.
அதுமட்டுமில்லாமல், சிறு குழந்தைகளைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்தித் தவெக இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக ஒரு பகீர் குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். இது தொடர்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசு நிர்வாகம் குறித்துப் பேசிய ஸ்டாலின், “திமுக கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைத்தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. எங்களின் சாதனைகளை யாராலும் மறைக்கவோ, மாற்றவோ முடியாது. அந்தத் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கும் வரை நாம்தான் மறைமுகமாக ஆட்சி செய்கிறோம் என்று அர்த்தம்” எனத் தெரிவித்தார்.
திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக, திமுக என்பது ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து வரும் ஒரு சக்தி என்பதை அவர் நினைவுபடுத்தினார். இது வெறும் தற்காலிகச் சரிவுதான் என்றும், மிக விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் அவர் உறுதியளித்தார்.ஸ்டாலினின் இந்த “இன்ஸ்டாகிராம் கட்சி” விமர்சனம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
