கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது : முத்தரசன் கண்டனம்

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக கச்சத்தீவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா்.

இலங்கை அதிபரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அநுர குமார திசாநாயகவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலு சோ்க்காது. இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவு மற்றும், தமிழக மீனவா்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவா்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்தில்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

Related News

Latest News