இன்று நள்ளிரவு பூமியைத் தாக்கும் சூரியப் புயல்! 1400 கிமீ வேகத்தில் வரும் அதிசயம்!

இன்று நள்ளிரவில் ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கப்போவதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளன. சூரியனில் ஏற்பட்ட ஒரு பிரம்மாண்டமான வெடிப்பு காரணமாக, இந்த ஆண்டின் மிகக் கடுமையான காந்தப் புயல் இன்று ஜூன் 8-ஆம் தேதி பூமியின் காந்தப்புலத்தை மோதவுள்ளது.

இதனை விஞ்ஞானிகள் ‘G3’ ரகத்தைச் சேர்ந்த ஒரு வலிமையான காந்தப் புயல் என்று வகைப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்வு விண்வெளியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவது மட்டுமல்லாமல், வானில் ஒரு கண்கவர் அதிசயத்தையும் நிகழ்த்தப்போகிறது. சூரியனின் மேற்பரப்பில் உள்ள ‘Active Region 4461’ என்ற மிகவும் ஆக்டிவான பகுதியில் இருந்து கடந்த ஜூன் 6-ஆம் தேதி ஒரு மெகா வெடிப்பு நிகழ்ந்தது.

இதிலிருந்து கிளம்பிய காந்த துகள்கள் மற்றும் பிளாஸ்மா மேகங்கள், தற்போது விநாடிக்கு சுமார் 1400 கிலோமீட்டர் என்ற நினைத்துப் பார்க்க முடியாத அசுர வேகத்தில் பூமியை நோக்கிப் பயணித்து வருகின்றன. இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே சூரியனில் இருந்து கிளம்பிய சில மெதுவான புயல்களை, இப்போது வரும் இந்த அதிவேகப் புயல் முந்திச் சென்று, அவற்றுடன் ஒன்றோடொன்று இணைந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனை அறிவியல் மொழியில் ‘Cannibal CME’ என்று அழைக்கிறார்கள். அதாவது முந்தைய புயல்களைச் சாப்பிடும் புயல் என்று அர்த்தம். இப்படி நடக்கும்போது இந்தப் புயல் பூமிக்கு வரும்போது இன்னும் பல மடங்கு சக்திவாய்ந்ததாக மாறிவிடும்.

இதனால் நமக்கு என்ன ஆபத்து என்று கேட்டால், மனிதர்களுக்கு நேரடியாக எந்தவித உடலியல் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், நமது நவீனத் தொழில்நுட்பங்களுக்கு இது சவாலாக அமையலாம். குறிப்பாகச் செயற்கைக்கோள் செயல்பாடுகள், ஜிபிஎஸ் வழிகாட்டுதல், ரேடியோ தகவல் தொடர்புகள் மற்றும் சில இடங்களில் மின்சார விநியோகத்தில் சிறிய அளவிலான தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இன்னொரு பக்கம் இது ஒரு அழகான விண்வெளி ஒளி நடனத்தை நமக்குத் தரப்போகிறது. பூமியின் வளிமண்டலத்தில் இந்தத் துகள்கள் மோதும்போது ‘அரோரா’ எனப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற ஒளிக் கற்றைகள் வானில் தோன்றும்.

பொதுவாக வட துருவப் பகுதிகளில் மட்டுமே தெரியும் இந்த அதிசயம், இந்த முறை புயலின் வீரியம் அதிகமாக இருப்பதால் வட இந்தியாவின் மலைப் பகுதிகள், குறிப்பாக லடாக் மற்றும் இமயமலைப் பகுதிகளில் தெரிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்த வான வேடிக்கையைக் காண முடியும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Related News

Latest News