திமுக பிரச்சாரத்தில் திவ்யா சத்யராஜ் மீது செருப்பு வீச்சு? பரபரப்பு குற்றச்சாட்டு!!

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, தவெக கட்சியினரால் தன்னை அவமதிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக திவ்யா சத்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மாநில துணைச் செயலாளராக திமுகவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் அவர், நேற்று மாலை தெரு பிரச்சாரத்தின் போது தவெக உறுப்பினர்கள் குழு தனது மீது செருப்புகளை வீசியதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தன்னை அதிர்ச்சியடையச் செய்தாலும், தனது பேச்சை நிறுத்தவில்லை என்றும், தைரியமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்ததாகவும் கூறினார்.

தனது பெற்றோர் தன்னை தைரியமாக வளர்த்ததாகவும், கருத்து தெரிவிப்பது ஒவ்வொருவருக்கும் உரிமை என்றும், அதற்காக உடல்ரீதியான தாக்குதல்கள் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார். தன் குடும்பம் முற்போக்கானது என்றும், சகோதரர் சிபியுடன் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் ஒருபோதும் மோதல் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு பெண் தனது கருத்தை வெளிப்படுத்தியதற்காக இவ்வாறு அவமதிக்கப்பட முடியாது என்றும், தவெக தலைவர் விஜய் தனது கட்சி உறுப்பினர்களுக்கு பெண்களை மதிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். அதேசமயம், சங்கீதா விஜயை மிகவும் சிறந்த பெண்ணாகக் குறிப்பிடும் அவர், அவருக்கும் மரியாதை வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

முன்னதாக, பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, அனுபவமில்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது என்று விஜயை விமர்சித்திருந்தார். அவரது தந்தை நடிகர் சத்யராஜும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News