வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகள் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் மனநிம்மதியை மேம்படுத்தும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து எந்தவிதமான கவன ஈர்ப்பும் இல்லாமல் அமைதியாக அதாவது, Silently வெளியேற முடியும்.
இதுவரை ஒருவர் குழுவை விட்டு வெளியேறினால், அந்த தகவல் அனைத்து உறுப்பினர்களுக்கும் Notification ஆக தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் தேவையற்ற கேள்விகள் மற்றும் சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும் நிலை இருந்தது.
புதிய அப்டேட்டின் படி, இனிமேல் ஒரு பயனர் குழுவை விட்டு வெளியேறும் போது, அந்த தகவல் குழு நிர்வாகி அதாவது, Admin-க்கு மட்டும் அறிவிக்கப்படும். மற்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செல்லாது. இதன் மூலம் தனிப்பட்ட காரணங்களுக்காக குழுவை விட்டு வெளியேற விரும்பும் பயனர்களுக்கு அதிக சுதந்திரமும் பாதுகாப்பும் கிடைக்கிறது.
குறிப்பாக அலுவலக குழுக்கள், குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் போன்றவற்றில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேவையற்ற விளக்கங்கள் மற்றும் தவறான புரிதல்களை தவிர்க்க இந்த மாற்றம் உதவும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, சிம் கார்டு இல்லாமல் இந்த செயலிகளை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. சிம் கார்டு இல்லாததால், சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிவது காவல்துறைக்கு சிரமமாக இருந்து வந்தது.
இந்த நிலையில், இத்தகைய மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுவரை வாட்ஸ்அப்பை மொபைல் போனில் நிறுவும் போது ஒருமுறை ஓடிபி (OTP) அளித்தால் போதுமானதாக இருந்தது. அதன் பிறகு அந்த சிம் கார்டு இல்லாமலேயே, Wi-Fi அல்லது வேறு சிம் மூலம் கிடைக்கும் இணைய இணைப்பைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடிந்தது.
ஆனால் இனிமேல், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கு, செயலில் உள்ள சிம் கார்டு கட்டாயமாக மொபைல் போனில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு அமல்படுத்தியுள்ளது.
அதேபோல், கணினி மூலம் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்களுக்கு, ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யப்படும். மீண்டும் பயன்படுத்த QR கோட்டை (QR Code) ஸ்கேன் செய்து உள்நுழைய வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
