இப்போது ஹார்ட் அட்டாக் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிலருக்கு வெளிப்படையான அறிகுறிகளுடன் வரும் நிலையில், சிலருக்கு எந்தத் தெளிவான அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படுவது “சைலன்ட் ஹார்ட் அட்டாக்” எனப்படுகிறது. இதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இதயத் தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் சரியாக கிடைக்காததால் இதயத் தமனிகள் பாதிக்கப்படுவது தான் ஹார்ட் அட்டாக். சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருப்பதால், பலரும் அதை கவனிக்காமல் விடுகிறார்கள். இதை சாதாரண சோர்வு அல்லது அசிடிட்டி என்று தவறாக புரிந்து கொள்வதும் பொதுவாக நடைபெறுகிறது.
சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் முக்கிய அறிகுறிகள்:
முதலாவது, எவ்வளவு ஓய்வு எடுத்தாலும் குறையாத அசாதாரண சோர்வு. இதயம் ரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாததால் உடலில் சோர்வு நீடிக்கும்.
இரண்டாவது, அடிக்கடி மூச்சு திணறல் அல்லது மூச்சு வாங்குவதில் சிரமம். இதயத்தின் செயல்பாடு குறைவதால் ரத்தம் நுரையீரலுக்கு திரும்பி மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படுகிறது.
மூன்றாவது, திடீர் தலைசுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம். ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நரம்பு மண்டலத்தை பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தோன்றும். இதை பலர் உணவு விஷம் அல்லது நீர்ச்சத்து குறைபாடு என்று தவறாக நினைக்கிறார்கள்.
நான்காவது, தூக்கத்தில் குறைபாடு அல்லது காரணமில்லாத பதற்றம். உடலில் ஏதோ சரியில்லை என்ற உணர்வு மற்றும் அமைதியின்மை ஏற்படும்.
ஐந்தாவது, இடைவிடை நெஞ்சு வலி. தொடர்ச்சியாக இல்லாததால், இதை பலர் அஜீரண பிரச்னை என நினைத்து புறக்கணிக்கிறார்கள்.
இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால், பெரிய அறுவை சிகிச்சைகள் போன்றவை தவிர்க்கப்படலாம். சரியான மருந்து சிகிச்சை மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.
பெண்களிடம் சைலன்ட் ஹார்ட் அட்டாக் அதிகமாகக் காணப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாதவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பத்தில் இதய நோய் வரலாறு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
