கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பேசப்பட்ட இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இன்று அதாவது செப்டம்பர் 29, திங்கட்கிழமை, மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான கடைகள் மூடப்படும் என கூறப்படுகிறது.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கு 10,000 பேர் வருவார்கள் என அனுமதி பெற்றிருந்த நிலையில், 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டதால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், தன்னார்வலர்கள், குடிநீர், மருத்துவ குழுக்கள் போன்ற வசதிகள் இல்லாததே அதிக உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக பொறுப்பாளர்களுக்கு எதிராக பாதுகாப்பு குறைபாடு மற்றும் அனுமதி மீறல் குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கடையடைப்பு, கரூர் துயரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியாகவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில் அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இன்று மருந்தகங்கள், மருத்துவமனைகள், அவசர சேவைகள், பால் விநியோகம், பெட்ரோல் பங்குகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும். மேலும் மளிகைக் கடைகள். ஜவுளி மற்றும் ரெடிமேட் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகள், மொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடைகள் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.