மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள “சுட்டுத் தள்ளுங்கள்” என்ற உத்தரவு உலக நாடுகளைப் பதற வைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை வைக்க முயற்சிக்கும் எந்தவொரு ஈரானியப் படகையும் கண்டதும் சுடுவதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் ட்ரம்ப் நேரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த எட்டு வாரங்களாக இந்த முக்கிய நீர்வழிப்பாதை அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள நிலையில், “ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படும் வரை இந்த ஜலசந்தி முழுமையாக மூடியே இருக்கும்” என்று ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உலகின் எரிசக்தித் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 75 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பேரல் 106 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நிபந்தனையாக உள்ளது. ஆனால், இந்த முடக்கமும் அச்சுறுத்தலும் பேச்சுவார்த்தைக்குப் பெரிய தடையாக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் குற்றம் சாட்டியுள்ளார்.
கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கா அதிரடியாகச் சிறைபிடித்த நிலையில், ஈரான் தனது நாட்டுப் பாதுகாப்புப் படையின் உதவியோடு ஒரு அரிசிக் கப்பலைப் பாதுகாப்பாகத் தனது துறைமுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஈரானின் தினசரி வருமானத்தில் சுமார் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது சற்று நிம்மதியை அளித்தாலும், அமெரிக்கா – ஈரான் இடையிலான இந்த நேரடி மோதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜதந்திர மோதல் அமைதியில் முடியுமா அல்லது முழு அளவிலான போராக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
