உலகின் மிகப் பதற்றமான கடல் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பலை, ஈரான் கமாண்டோக்கள் அதிரடியாக கைப்பற்றிய காட்சி வெளியாகியுள்ளது.
தகவல்களின் படி, லைபீரியக் கொடியுடன் இயங்கிய ‘எப்பமிநோன்டஸ்’ (Epaminondas) கப்பல் துபாய் நகரிலிருந்து முந்த்ரா துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரான் கடற்படை அதனை குறிவைத்து நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. அதிவேகப் படகுகளில் வந்த கமாண்டோக்கள் கப்பலைச் சூழ்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் கப்பலின் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஈரான் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்த வீரர்கள் கப்பலை துரத்தி ஏணியின் உதவியுடன் அதில் ஏறி, ஆயுதங்களின் முனையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. அவர்கள் இன்ஜின் அறை உள்ளிட்ட பகுதிகளை முழுமையாக சோதனை செய்து கப்பலை கைப்பற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘MSC ஃபிரான்செஸ்கா’ (Francesca) என்ற மற்றொரு கப்பலும் ஈரான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. அது ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதபோதிலும், நடுக்கடலில் இத்தகைய தாக்குதல் நடந்தது உலக கடல்சார் பாதுகாப்பை குறித்து புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவை நோக்கி வந்த கப்பல் தாக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவுக்கு முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதனால், எதிர்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தூதரக பேச்சுவார்த்தைகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
