பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை வாஹினி (48) புற்றுநோய் காரணமாக காலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறியப்பட்ட அவர், சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில காலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாஹினியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.
நோய் தீவிரமடைந்ததால், சிகிச்சைக்கு அதிக அளவில் பணம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. ஐசியூ சிகிச்சை மற்றும் கீமோதெரபி காரணமாக மருத்துவ செலவுகள் அதிகரித்து, சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உதவிக்காக கோரிக்கை விடுக்கப்பட்டாலும், போதிய தொகை கிடைக்காத நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் புதன்கிழமை அவர் காலமானார்.
சின்னத்திரையில் பல தொடர்களில், குறிப்பாக வில்லி வேடங்களில் நடித்து புகழ் பெற்ற வாஹினி, தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் சில தொடர்களில் நடித்துள்ளார். புற்றுநோய் பாதிப்புக்குப் பிறகு நடிப்பை விட்டு விலகிய அவர், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
வாஹினியின் மறைவு சின்னத்திரை வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்கள் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
