Thursday, September 4, 2025

செப்டம்பரில் வானில் அடுக்கடுக்காய் அதிசயம் : ரத்த நிலா முதல் சனி வளையம் வரை!

செப்டம்பர் மாத வானம், நிலவின் இன்பக் கொண்டாட்டம், கை கோர்க்கும் கோள்கள், வானங்களில் அரிய நிகழ்வு என இவைகளால் நிறைந்துள்ளது. இடைவிடாமல் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கவிருக்கும் அந்த அற்புதங்களை காண, நாம் கண் சிமிட்ட கூட நேரம் இருக்காது போலிருக்கிறது.

முதலாவதாக, செப்டம்பர் 7-ம் தேதி இரவு “Blood Moon” அதாவது ரத்த நிலா என்று அழைக்கப்படும் வானியல் அதிசயம் நடக்கவிருக்கிறது. இதனை இந்தியாவிலும் தென் ஆசிய பகுதியிலும் தெளிவாக பார்க்க முடியும். இது சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 16 அன்று நிலவும் வியாழனும் அருகருகே வரவிருப்பது அடுத்த வானியல் அதிசயம். அடுத்ததாக செப்டம்பர் 19 அன்று நிலவு, சுக்கிரன், ரெகுலஸ் நட்சத்திரம் ஆகிய மூன்றும் அருகருகே பயணிக்கும் அழகான தருணம் நடக்கும்.

அடுத்ததாக, செப்டம்பர் 21ல் சனி கோள் நமக்கு மிக அருகில், மிக பிரகாசமாகக் காட்சியளிக்கும். அதை வெறும் கண்ணால் கூட தெளிவாகப் பார்க்கலாம். தொலைநோக்கி வைத்திருப்பவர்களுக்கு சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையம் கூட தெளிவாகத் தெரியும்.

அடுத்து, செப்டம்பர் 22ம் தேதி பகலும் இரவும் சம அளவாக இருக்கும். செப்டம்பர் 23, நெப்டியூன் கோள் பிரகாசமாக ஒளிரும். டெலஸ்கோப்பின் மூலம் வானின் ஓரத்தில் நீல ஒளிவிளக்காய் நன்றாக தென்படும். போனஸாக செப்டம்பர் முதல் வாரத்தில் “Aurigids” எனப்படும் விண்மீன் மழையை காணலாம்.

செப்டம்பர் வானம் நமக்கு ஒரு அழகான கதை சொல்லப்போகிறது. சிவப்பாய் மாறும் நிலா, ஒளிவீசும் சனி, மெதுவாய் மிதக்கும் நெப்டியூன். இது போதாது என்று விண்மீன்களின் மழை வேறு. ஒவ்வொரு நிழலிலும் ஒரு ரகசியமும், ஒவ்வொரு இரவிலும் பிரபஞ்சம் ஒரு வண்ண ஓவியத்தையும் தீட்டவிருக்கிறடது. காண்பதற்கு நாம் தயாராகிக்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News