சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் செந்தில்பாலாஜி எந்நேரத்திலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் பரவி வருகிறது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார். உடனடியாக அவருக்கு மின் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
ஜாமீன் வழங்கிய போது அமைச்சராக பதவியேற்க அனுமதி வழங்கவில்லை என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் மசோதாவை செந்தில்பாலாஜி தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார். இதனால் செந்தில்பாலாஜி எந்நேரத்திலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் பரவி வருகிறது.