Wednesday, February 18, 2026

ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திரை பிரபலங்கள்!!

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என முன்னணி நடிகர்களுள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் குணமாகி, மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில்,புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயக்கமடைந்தார். அவரை உடனடியாக மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த சூழலில், நேற்று மாலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9.05 மணியளவில் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகின. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி என பல திரை நட்சத்திரங்கள் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்து வருகின்றனர்.மேலும், பலர் சமூக வலைத்தளங்களிலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில்.

நடிகர் சிலம்பரசன்

“நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ரோபோ ஷங்கரின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டு, கைகளைக் கூப்பிய ஈமோஜியுடன் RIP என்று எழுதினார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

“திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி – சின்னத்திரையில் சாதித்து – திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – கலையுலகினர் – ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்தோம்” என்று பதிவிட்டுள்ளார் .

நடிகர்-இயக்குனர் ராகவா லாரன்ஸ்

பொழுதுபோக்கு துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி

“காலப்போக்கில் ஏற்படும் அழிவுகரமான தேர்வுகள் ஆரோக்கியத்தை எவ்வாறு சிதைத்துவிடும் என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஒரு சிறந்த திறமை மிக விரைவில் போய்விட்டது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

நடிகர்-தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தில் ரோபோ ஷங்கர் நடித்த ஒரு பிரபலமான நகைச்சுவை காட்சியின் திரைக்கதையைப் பகிர்ந்து கொண்டு, “என் படங்களில் மிகவும் பிரபலமான நகைச்சுவை காட்சியாக இது இருக்கலாம்.. அவர் இல்லாமல், இது இவ்வளவு மறக்கமுடியாததாக இருந்திருக்காது…என்றும் ரோபோஷங்கரின் ஆத்ம சாந்தியடையட்டும். தமிழ் சினிமா உங்களைப் போன்ற ஒரு திறமையாளரை நிச்சயமாக இழக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை சிம்ரன்

“ரோபோ ஷங்கரின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். மில்லியன் கணக்கானவர்களுக்கு புன்னகையை அளித்த திறமைசாலி. உங்களை நாங்கள் மிஸ் செய்வோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும் பலமும். ” என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

“2003 ஆம் ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் தனது நிகழ்ச்சிகளால் அவர் எப்போதும் ஒரு ஊக்கமளிக்கும் பிரபலமாக இருந்தார். ரோபோ ஷங்கர் அண்ணாவை எங்களை விட்டுபிரிவதை பார்ப்பது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் பிரார்த்தனைகள்,” என்று அவரது பதிவில் பதிவிட்டிருந்தார்.

ராதிகா சரத்குமார்

“அவரது சிறந்த பங்கை கொடுத்து நகைச்சுவையால் கடின உழைப்பாலும், அனைவரையும் எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக்கொண்டார். இது நமக்கு பேரிழப்பு.எனது பிராத்தனைகள் அவரது குடும்பத்திரருக்கும், நண்பர்களுக்கும் உண்டு”, என்று பதிவிட்டுள்ளார்

நடிகர் அஸ்வின் கக்குமானு

“ரோபோசங்கர் ஐயாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது

ரம்யா சுப்ரமணியன்

“ரோபோ சங்கர் அண்ணாவின் மறைவை குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை. பிரமித்து விட்டேன் நீங்கள் எப்போதும் காட்டிய அரவணைப்பு, பாராட்டு மற்றும் நீங்கள் தினமும் என் முகத்தில் புன்னகையை வரவழைக்க அனுப்பிய சிறிய மிமிக்ரி வீடியோக்களை நினைவில் கொள்கிறோம்.அவரது குடும்பத்திற்கு பிரார்த்தனைகளையும் பலத்தையும் கொடுக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்

Related News

Latest News