Wednesday, July 2, 2025

‘ஐ லவ் யூ’ கூறுவது பாலியல் குற்றம் ஆகாது: மும்பை உயர்நீதிமன்ற கிளை

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வழி மறித்து “நான் உன்னை நேசிக்கிறேன்” (‘ஐ லவ் யூ’) என்று கூறியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டது.

விசாரணை நடத்திய நாக்பூர் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 2017ஆம் ஆண்டு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து வாலிபர், மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது : ‘ஐ லவ் யூ’ என்ற வாலிபர் தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த சூழலும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், அநாகரிகமான சைகைகளை செய்தல் அல்லது பெண்களை அவமதிப்பது, ஆபாசமாக நடந்து கொள்வது போன்றவைகள்தான் பாலியல் குற்றங்களாகும் என கூறியது. இதையடுத்து நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்ததுடன் சிறுமியிடம் ‘ஐ லவ் யூ’ என்று கூறிய வாலிபரை உயர்நீதிமன்றம் விடுதலை செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news