Monday, April 28, 2025

தன்னுயிர் கொடுத்து பல்லுயிர் காத்த வீரமகன்! சத்தியம் தொலைக்காட்சியின் வீர வணக்கம்..!!!

பஹல்காமின் பைசரன் புல்வெளி… இயற்கையின் நிஜ அழகை ஒளிரவைக்கும் இடம். “மினி சுவிட்சர்லாந்து” என்று அழைக்கப்படும் இந்த இடம், சுற்றுலாப் பயணிகளின் கனவுகள் நிறைவடையும் ஒரு வெறும் விடுமுறை தலம் மட்டுமல்ல… கடந்த செவ்வாய்க்கிழமை அது, நம்மை ஆழமாக உலுக்கும் கதையின் நாடக மேடையாக மாறியது.

அந்த நாள்…சுற்றுலாப் பருவம் உச்சத்தில், வழக்கம்போல துவங்கியது… மகிழ்ச்சியுடன் பயணிகள் தங்கள் நாள் திட்டங்களை அனுபவித்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சியை கண்முன் குலைத்தன துப்பாக்கி சத்தங்கள். பயங்கரவாதிகள் திடீரென தோன்றி, பயணிகளை மதத்தின் அடிப்படையில் பிரித்து ஒருவருக்கொருவர் சுடத் தொடங்கினர். உயிர்கள் கண்முன் சரிந்தன. பயம், குழப்பம், கண்ணீரில் மூழ்கிய அந்த தருணத்தில் ஒரு மனிதன் மட்டும் தன் உயிரை பற்றி யோசிக்கவில்லை.

அவர் பெயர் சையத் அடில் ஹுசைன் ஷா. வயது 28. பஹல்காமில் குதிரை சவாரி நடத்தும் இளைஞர். வேலைக்காக வந்திருந்தார். வழக்கம்போல ஒரு குடும்பத்தை அழைத்து சென்றுகொண்டிருந்தார். ஆனால் துப்பாக்கிச் சூடு தொடங்கியதும், அவர் தப்பித்து ஓடவில்லை. மாறாக, அந்த பயங்கரவாதிகளில் ஒருவரை நோக்கி விரைந்தார். அவர் முயற்சி – ஒரு ஆயுதத்தை பறிக்க. அதில் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் செய்த அந்த முயற்சி… ஒரு நொடிக்காவது பயங்கரவாதியின் கவனத்தை திருப்பியது. அந்த நொடியில்தான் அந்த சுற்றுலாப் பயணிகள் ஓடி உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

அவர் உயிர் இழந்தார். ஆனால் அவரால் ஒரு குடும்பம் உயிரோடு தப்பியது. அவரது செயல், வெறும் ஒரு துணிச்சலின் அடையாளம் மட்டும் இல்லை. அது மனிதத்தன்மையின், சகோதரத்துவத்தின், நல்லிணக்கத்தின் ஒரு சின்னம்.

அந்த கொடூரத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த 28 உயிர்களில், ஒருவர் மட்டுமே முஸ்லிம் – அதுவும் அந்த பயங்கரவாதிகளின் இலக்கு அல்லாத ஒரு போராளி. அவர், தன்னுடன் வந்திருந்த பயணியை காப்பாற்ற முயன்று உயிரிழந்தவர். சையத் அடில் ஹுசைன் ஷா.

மேலும் அவரது தாயார் துடிதுடித்து கூறுகையில் ” அவர் எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். அவர் வீட்டிற்கு சம்பாதித்த

ஒரே நபர், எங்களைப் பராமரித்து, கண்ணியத்துடன் வாழ்ந்து வந்தார்,” என்று கூறியபோது அவர் குரல் நடுங்கியது. “இப்போது அவர் போய்விட்டார், நாங்கள் தொலைந்துவிட்டோம். ஆனால் அவர் உன்னதமான ஒன்றைச் செய்து இறந்தார்… இதனால் நான் எப்போதும் பெருமைப்படுவேன்.”என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அவரது இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கூடி வந்தனர். அவர்களுடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் வந்திருந்தார்  .அவரது குடும்பத்துக்கு நாங்கள் துணை நிற்போம் ,” என்று அவர் கூறியது அவர் குடும்பத்திற்கு ஒரு பெரும் ஆதரகவே இருக்கிறது.

இது ஒரு கதையல்ல. இது உண்மை. இது காஷ்மீரில் நடந்தது. இது மனிதனின் உணர்வுகளை உலைக்கும் ஒரு தாயின் கண்ணீர், ஒரு தந்தையின் அழுகை, ஒரு இளைஞனின் உயிர்த் தியாகம்.

சையத் அடில் ஹுசைன் ஷா… உங்கள் பெயர் அந்த பசுமையான பைசரன் புல்வெளிகளில் மட்டுமல்ல… மக்களின் உள்ளங்களிலும் என்றென்றும் ஒளிரும்…. தன்னுயிர் கொடுத்து பல்லுயிர் காத்த உங்களுக்கு சத்தியம் தொலைக்காட்சியின் வீர வணக்கம் !!!

Latest news