Tuesday, December 9, 2025

50 ஆண்டுகளாக எரிந்துகொண்டிருக்கும் தீக்கிணறு! மனிதர்கள் போட்ட தப்பு கணக்கு!

ரஷ்யாவிற்கு அருகிலுள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள “Door to Hell” எனப்படும் தீக்கிணறு, உலகின் மிகப் பெரும் மர்மங்களில் ஒன்றாக விளங்குகிறது. “நரகத்தின் கதவு” என்று அழைக்கப்படும் இந்த இடம், கடந்த 50 ஆண்டுகளாக இடைவிடாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

1971ஆம் ஆண்டு, சோவியத் யூனியனின் புவியியல் விஞ்ஞானிகள், இயற்கை எரிவாயு வளங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டபோது, தவறுதலாக ஒரு பெரிய குகை இடிந்து விழுந்தது. அதிலிருந்து மிகப்பெரிய அளவில் மீத்தேன் எரிவாயு வெளியேற ஆரம்பித்தது.

இதனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய விஞ்ஞானிகள், அதனை தீ வைத்து எரிக்க முடிவு செய்தனர். சில நாட்களில் எரிவாயு முழுமையாக எரிந்து தீரும் என்று நினைத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தீ இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

துர்க்மெனிஸ்தானின் தர்வாஸா எனப்படும் பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த தீக்கிணறு, சுமார் 70 மீட்டர் அகலமும், 30 மீட்டர் ஆழமுமாக உள்ளது. இரவுகளில் இதன் தீப்பிழம்பு வானத்தைக் கூட சிவப்பாக்கும் அளவுக்கு பிரகாசமாக இருக்கும்.

இப்பகுதி தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த மர்மமான இடத்தை பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். வியப்பூட்டும் இந்த “Door to Hell” மனித தவறால் உருவான ஒரு இயற்கை அதிசயமாக மாறி, நரகத்தின் கதவைப் போல எரிந்துகொண்டே, உலகத்தை இன்னும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

Related News

Latest News