‘லோன் ஆப்’ மூலம் நாடு முழுவதும், 300 கோடி மோசடி செய்த 14 பேர் கொண்ட கும்பலை சேர்ந்த ஒருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023ம் ஆண்டில் தனது மொபைல் போனில் உடனடி லோன் ஆப் டவுன்லோடு செய்து, 10,000 ரூபாய் கடன் பெற்றார். கடனை செலுத்திய பிறகும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு ஆன்ட்ருஸ் தர மறுத்ததால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கடன் செயலி மூலம் சுருட்டிய பணம் நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 பேருக்கு சென்றிருப்பது தெரிய வந்தது.
இந்த மோசடி கும்பலில், கேரளாவை சேர்ந்த முகமது ஷாபி என்ற நபரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். அவரது வங்கி கணக்கில் மட்டும், 10.65 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது.
அவரது கூட்டாளிகள் 13 பேர் மூலம் நாடு முழுதும், 300 கோடிக்கு மேல் பண பரிமாற்றம் செய்துள்ளனர். இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.