Monday, February 23, 2026

ரூ.1.5 லட்சம் மோசடி., வருமான வரி ரீஃபண்ட்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

வரி ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் வரி செலுத்துவோரில் உருவாகும் பதற்றத்தை மோசடி கும்பல்கள் சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. “உங்கள் ரீஃபண்ட் நிலுவையில் உள்ளது”, “உடனே சரிபார்க்காவிட்டால் ரத்து செய்யப்படும்” போன்ற அவசரமான செய்திகளுடன் ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது.

அந்த லிங்கை கிளிக் செய்தால், Income Tax Department அதிகாரப்பூர்வ இணையதளம் போல வடிவமைக்கப்பட்ட போலி தளத்திற்கு பயனர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு பான் எண், பாஸ்வேர்டு, ஓ.டி.பி. போன்ற விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. சில சமயங்களில் வங்கி கணக்கு விவரங்களும் கோரப்படுகின்றன. இந்த தகவல்களை வழங்கிய சில நிமிடங்களிலேயே வங்கிக் கணக்கிலிருந்த பணம் திருடப்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில் ஒருவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்?

“இது கடைசி வாய்ப்பு”, “உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் ரீஃபண்ட் ரத்து செய்யப்படும்” போன்ற வார்த்தைகள் மூலம் பயமுறுத்தப்படுகிறார்கள். அந்த பதற்றத்தில் நிதானமாக சிந்திக்காமல் லிங்குகளை கிளிக் செய்வதே முக்கிய காரணமாகும்.

வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ள முக்கிய அம்சங்கள்:

  • ரீஃபண்ட் சரிபார்ப்புக்காக எஸ்.எம்.எஸ் மூலம் லிங்க் அனுப்பாது.
  • தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி கேட்காது.
  • மின்னஞ்சல் மூலம் பாஸ்வேர்டு அல்லது வங்கி விவரங்களை கேட்காது.

பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • ரீஃபண்ட் நிலையை அறிய, அதிகாரப்பூர்வ e-Filing தளத்தில் நேரடியாக லாக்-இன் செய்ய வேண்டும்.
  • அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அவசர குறுஞ்செய்திகளை புறக்கணிக்க வேண்டும்.
  • எந்த சூழ்நிலையிலும் ஓ.டி.பி., பாஸ்வேர்டு போன்ற ரகசிய தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது.
  • சந்தேகத்திற்கிடமான தகவல்கள் வந்தால், அதிகாரப்பூர்வ புகார் பிரிவில் அல்லது Indian Computer Emergency Response Team (CERT-In) அமைப்பில் புகார் அளிக்கலாம்.

வரி ரீஃபண்ட் தாமதமாக இருந்தால் அது தரவு சரிபார்ப்பு போன்ற நிர்வாக காரணங்களால் இருக்கலாம். ஆனால் எந்த நிலையிலும் வருமான வரித்துறை ஓ.டி.பி. கேட்காது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

Related News

Latest News