Saturday, July 12, 2025

ரிஷப் பண்டால் பெருத்த பின்னடைவு 10 பேருடன் ஆடப்போகும் இந்தியா?

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா 1 போட்டியை வென்ற நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய அணி பும்ராவை இறக்க பதிலுக்கு இங்கிலாந்து ஆர்ச்சரை களமிறக்கியுள்ளது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸின் முதல் நாளில் 4 விக்கெட்களை பறிகொடுத்தாலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் இருவரும் அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இதனால் விரைந்து விக்கெட்களை கைப்பற்ற வேண்டிய சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது.

இந்தநிலையில் துணை கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கீப்பிங் செய்யும்போது விரலில் ஏற்பட்ட காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது துருவ் ஜுரல் மாற்று வீரராக களமிறங்கி உள்ளார். என்றாலும் ICC விதிப்படி அவரால் விக்கெட் கீப்பிங் மட்டுமே செய்ய முடியும். பேட்டிங் செய்ய முடியாது.

2017ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட ICC விதிமுறையின்படி, விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டு, அது உண்மை என நடுவர் கண்டறியும் பட்சத்தில், மாற்று விக்கெட் கீப்பரை விளையாட வைக்க முடியும். அந்த மாற்று விக்கெட் கீப்பர், 15 பேர் கொண்ட அணி பட்டியலில் இடம்பெற்றவராக இருக்க வேண்டும். மாற்று விக்கெட் கீப்பரால், விக்கெட் கீப்பிங் மட்டுமே செய்ய முடியும். பேட்டிங் செய்ய முடியாது.

இதனால் ரிஷப்பால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால் இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் 10 பேருடன் மட்டுமே பேட்டிங் செய்யும் நிலை ஏற்படும். இது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையலாம். ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் 2 சதங்களை அடித்து அசத்தினார்.

2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் சொதப்பினாலும் 2வது இன்னிங்சில் 65 ரன்களை குவித்தார். தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை என்றால் அது இந்திய அணிக்கு நல்ல விஷயம் கிடையாது. இதனால் தற்போது மிகப்பெரும் இக்கட்டில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது.

ரிஷப் பண்ட் இல்லாமல் இந்திய அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை வெல்லுமா? இல்லை தோல்வியை சந்திக்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news