பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் தாமாகவே வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் எந்த வயதை சேர்ந்த குழந்தை மற்றும் சிறுவர்களும் வங்கிக் கணக்கை தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய் அல்லது தந்தையை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதாவது அவர்கள் பத்து வயதுக்கு குறைவாக இருப்பவர்களாக உள்ள பட்சத்தில் இந்த விதிமுறை பொருந்தும்.
ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் அவர்களாகவே வங்கிக் கணக்கை நிர்வகிக்கலாம். அவர்கள் சுயமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம் என்னும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகள் மற்றும் இன்டர்நெட் வங்கி வசதியையும் கொடுக்கலாமா வேண்டாமா என்பது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகம் துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.
சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளை பின்பற்றலாம் என்றும் இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.