சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், முன்னாள் நீதிபதிகள் சந்துரு மற்றும் பரந்தாமன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அரசமைப்பின்படி, உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது, நீதிபதி பணியிடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கு போதிய அளவில் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். ஒரு சில குழுக்களிலிருந்து நியமிக்கப்படாமல் நாடு முழுவதும் பரவலாக நியமனங்கள் நடைபெறவேண்டும்.
பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கேரளாவில் 74 சதவீதம் பெண்கள் கீழமை நீதிபதிகளாக இருந்தபோதும், ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.