“டிரம்பை முட்டாள்”என சொன்ன ஈரான்!! போருக்கு தயாராகும் அமெரிக்கா!! கச்சா எண்ணெய் விலை உயருமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அது எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக இரு நாடுகளும் நேரடி ராணுவ தாக்குதலை தவிர்த்தாலும், வார்த்தை போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒருபக்கம் அமெரிக்கா, மறுபக்கம் ஈரான் என இருவரும் தினமும் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இரு தரப்பும் மாறுபட்ட தகவல்களை வழங்குவதால் உலக சந்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதேசமயம், ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரை “முட்டாள்” என குறிப்பிட்டதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப் அல் மண்டேப் நீரிணையை மூடுவதாக அறிவித்திருப்பது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இந்த மோதல் தீவிரமடைந்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலக பொருளாதாரத்திலும், அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் நேரடி தாக்கம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News