தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்

584
Advertisement

“சாதிக்க வேண்டுமா சாதியை விட்டுவிடு” என கூறிக் காலங்காலமாக வேரூன்றிய சாதிய கட்டமைப்புகளின் பயனற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர் பெரியார்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.

செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் விளிம்புநிலை மக்களின் வலியை உணர்ந்ததோடு மட்டும் இல்லாமல் வழிகாட்டியாகவும் மாறியவர் பெரியார்.

1919ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெரியார், பின் தன் கொள்கை வேறுபாடு காரணமாக அக்கட்சியை விட்டு விலகினார். 1924ஆம் ஆண்டு கேரளாவில் தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதால், வைக்கோம் வீரன் என அழைக்கப்பட்டார்.

“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” போன்ற கருத்துக்களை அடிப்படையாக கொண்ட சுயமரியாதை இயக்கத்தை 1925ஆம் ஆண்டு தொடங்கிய பெரியார் மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் வலுவாக எதிர்த்து பாமரனுக்கும் பகுத்தறிவை ஊட்ட போராடினார்.

சுயமாக சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொண்டு தனது சொந்த பகுத்தறிவை வைத்து முடிவு எடுக்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழர்கள் மனதில் விதைத்து குறிப்பிடத்தக்க பலனையும் கண்டவர் பெரியார்.

சமூகத்தை ஆட்டிப்படைக்கும் ஆணாதிக்கத்தையும், அதை சுற்றி சுழலும் அவலங்களையும், அதனால் பெண்களுக்கு நேரும் உரிமை மறுப்பு, சமத்துவமின்மை போன்ற அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட முக்கிய பெண்ணியவாதி பெரியார். “பெண்களின் கைகளில் இருந்து கரண்டியை எடுத்து விட்டு புத்தகத்தை கொடுக்க வேண்டும்” என பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் பெரியார்.

இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கும் போது ஏன் பெண்கள் மட்டும் தாலி கட்டிக்கொள்ள வேண்டும், பெண்களை கற்புக்கரசி என சொல்கிறோமே அதுபோல ஆண்களுக்கு கற்புக்கரசன் என ஏன் ஒரு வார்த்தை இல்லை போன்று சமூகத்தை உறுத்த கூடிய பல கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டே இருந்தார் பெரியார்.

பெண்கல்வி, பெண் சொத்துரிமை, விதவை திருமணம் ஆகியவற்றுக்கு ஆதரவு குரல் எழுப்பியதோடு பெண்களின் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை அகன்று ஒவ்வொரு பெண்ணும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் போன்ற முற்போக்கு சிந்தனைகளுக்கு முன்னுரை எழுதினார்.

மேலும், தான் நடத்திய குடியரசு, விடுதலை போன்ற பத்திரிக்கைகளில் தொடர்ந்து பெண்ணிய, சமூகநீதி மற்றும் சமத்துவ கருத்துக்களை பதிவு செய்து வந்த பெரியார் காலங்கள் கடந்தாலும் தமிழகத்தின்  தவிர்க்க முடியாத சமத்துவ கொள்கைகள் வழியே வாழ்ந்து வருகிறார்.

சமூகநீதி பாதையில் பெரியாரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், கடந்த வருடம் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள், முதலமைச்சர் முக ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. சமூகநீதி நாளையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி உறுதிமொழி எடுக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.