Thursday, April 17, 2025

நான் ‘திரும்பி’ வந்துட்டேன்னு சொல்லு ‘தல’யால் உடைக்கப்பட்ட ரெக்கார்டுகள்

ஏப்ரல் 14ம் தேதி நடைபெற்ற சென்னை -லக்னோ போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாகவே அமைந்து விட்டது. தொடர் தோல்விகளால் ருதுராஜ் கேப்டன் பதவியில் இருந்து விலக, மீண்டும் ‘தல’ தோனி கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்மூலம் IPL வரலாற்றில், அதிக வயதான கேப்டன் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. என்றாலும் முதல் போட்டியில் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மறுபுறம் மும்பை, ஹைதாராபாத் அணிகள் வெற்றிபெற்று பார்முக்குத் திரும்பின.

இதனால் சென்னையும் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த நாளும் வந்துவிட்டது. லக்னோவை வீழ்த்தி சென்னை வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த போட்டியில் தல தோனி ஏகப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார்.

236 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய தோனி, வெறும் 11 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார். கடைசியாக 2019ம் ஆண்டு டெல்லிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

தோனி இதுவரை 16 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று இருக்கிறார். இதனால் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற கேப்டன் என்னும் புதிய சாதனை படைத்துள்ளார். இது மட்டுமின்றி IPL தொடரில் ஆட்டநாயகன் விருதை பெற்ற வயதான வீரர் என்னும் சாதனையும், தோனிக்கு சொந்தமாகி உள்ளது.

இதற்கு முன் 2014ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், 42 வயது ராஜஸ்தான் வீரரான பிரவீன் தாம்பே ஆட்டநாயகன் விருதை வென்று சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை 11 ஆண்டுகளுக்கு பிறகு தோனி உடைத்தெறிந்து இருக்கிறார்.

இதேபோல லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் மூலம், IPL வரலாற்றில் 200 ஸ்டம்பிங்குகள் என்னும் புதிய சாதனையை படைத்துள்ளார். லக்னோ வீரர் சமத் 20 ரன்னில் இருந்தபோது அவரை அசால்ட்டாக ரன்அவுட் செய்து, ஆட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

வழக்கமாக தோனியின் ‘மின்னல் வேக ஸ்டம்பிங்குகள்’ ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும். தற்போது இந்த ரன் அவுட் அவர்களின் பேவரைட் ஆக மாறியிருக்கிறது. தோனி குறித்து ரசிகர்கள், ” DRS, ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி, கேட்ச், பினிஷர் என அத்தனை ரோலையும் அழகாக செய்கிறார்.

அவருக்கு 43 வயது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை, ” என்று சமூக வலைதளங்களில், சில்லறைகளை சிதற விட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸை, வான்கடே மைதானத்தில் வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி எதிர்கொள்கிறது.

Latest news