ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது. இதன் விளைவாக வீட்டு கடன் வாங்கிய பலருக்கு ஒரு முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இப்போது நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி எழுகிறது – இந்த வட்டி விகிதக் குறைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நான் EMI-யைக் குறைக்கலாமா? இல்லையெனில் தவணைக் காலத்தை குறைக்கலாமா?
என்பதை +விவரமாகப் பார்ப்போம்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கும் போது அவர்கள் செலுத்தும் வட்டி. இந்த விகிதம் குறையும்போது, வங்கிகளும் நமக்கு வழங்கும் கடன்களில் வட்டியை குறைக்கிறார்கள். குறிப்பாக floating-rate அடிப்படையில் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நேரடியாக நன்மை ஏற்படும்.
இப்போது உங்கள் EMI குறையுமா, இல்லையெனில் கடன் காலம் குறையுமா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு வழிகளும் நன்மை தரக்கூடியவை. ஆனால் நீண்டகால நன்மையை விரும்புகிறவர்கள், தவணைக் காலத்தை குறைக்கும் விருப்பத்தை எடுத்தால் சிறந்தது என நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
உங்களிடம் ரூ.40 லட்சம் வீட்டு கடன் உள்ளது. 8.5% வட்டியில், 20 வருட காலத்திற்கு எடுத்துள்ளீர்கள். அதன்படி EMI ரூ.34,713. மொத்த வட்டி செலவு ரூ.43.31 லட்சம்.
இப்போது வட்டி விகிதம் 8% ஆகக் குறைந்தால், நீங்கள் அதே 20 வருட தவணை வைத்துக்கொண்டு, EMIயை குறைத்தால் ரூ.33,458 ஆகும். மொத்த வட்டி செலவு ரூ.40.29 லட்சம். இதில் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம்.
ஆனால், அதே ரூ.34,713 EMIயை தொடர்ந்தால், தவணைக் காலம் 20 வருடத்திலிருந்து சுமார் 18.3 வருடங்களுக்கு குறைகிறது. இப்போது மொத்த வட்டி செலவு ரூ.36.37 லட்சம் மட்டுமே. இதில் ரூ.6.93 லட்சம் வரை சேமிக்கலாம்!
இதிலிருந்து என்ன புரிகிறது தெரியுமா? தவணைக் காலத்தை குறைக்கும் விருப்பம் நீண்டகாலத்தில் அதிக லாபம் தருகிறது.
அதாவது, உங்கள் வருமானம் நிலையானதாக இருந்தால், உங்கள் செலவுகள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் தவணைக் காலத்தைக் குறைப்பது நல்லது. கடனை விரைவாக முடிக்கலாம், வட்டி செலவையும் குறைக்கலாம்.
ஆனால், உங்கள் வருமானத்தில் அழுத்தம் இருந்தால், வாழ்வுச் செலவுகள் அதிகமாக இருந்தால், குறைந்த EMI ஒரு நிவாரணம் அளிக்கும். இது மாதாந்திர செலவை சுமூகமாக வைத்திருக்க உதவும்.
முக்கியமானது என்னவென்றால், வங்கி தானாகவே இந்த மாற்றங்களை உங்கள் கடனில் கொண்டு வரமாட்டாது. நீங்கள் உங்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு, புதிய விகிதம் உங்கள் கடனுக்கு பொருந்துமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சில சமயங்களில், ஒரு சிறிய பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படலாம்.
மேலும் சில வங்கிகள், குறைந்த EMI மற்றும் குறைந்த தவணைக் காலத்தை ஒரே நேரத்தில் வழங்கும் திட்டங்களும் வைத்திருக்கின்றன. இது மிகவும் சீரான தீர்வாக இருக்கலாம்.
இது போல வட்டி விகிதக் குறைப்பு ஒரு பெரிய வாய்ப்பு. இது உங்கள் நிதி பயணத்தில் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க உதவும். உங்கள் வருமான நிலைமை, எதிர்கால இலக்குகள் ஆகியவற்றைப் பொருத்து, சிந்தித்து முடிவெடுங்கள்.