Saturday, May 10, 2025

திராவிட வெறுப்பை ஏற்க முடியவில்லை : பாஜகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது : மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்லேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடைபெறுகிறேன். இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் வழங்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் சிறப்பாகத்தான் நான் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் என்னை சிறப்பாக இயக்க இந்த இயக்கம் தவறிவிட்டது.

தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்விகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.

தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருங்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை என அவர் கூறியுள்ளார்.

Latest news