தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் இடி, மின்னலும் ஏற்படலாம்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 2ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் இன்று மாலை அல்லது இரவு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
