தண்டவாள விரிசல்… ரெயில் சேவை பாதிப்பு.. பயணிகள் கடும் அவதி…

சென்னை புறநகர் மக்களின் அன்றாடப் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் இன்று திடீர் பாதிப்பு ஏற்பட்டது.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டும், தாமதமாகவும் இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் சென்னை நகருக்குள் பணிக்காகவும் கல்விக்காகவும் பயணிக்கும் மக்கள் ரெயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.

திடீர் பாதிப்பால் பலர் நீண்ட நேரம் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

ரெயில் சேவை தாமதமானதால் பலர் மாற்று போக்குவரத்தாக மாநகர பேருந்துகளை நாடினர். தகவல் கிடைத்தவுடன் ரெயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ரெயில் சேவை விரைவில் முழுமையாக சீரடையும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News