முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏ.,வுமான ஆர்.பி.உதயகுமாரின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயகுமாரின் தாயார் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
அதிமுகவின் புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.,வின் தாயாரும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான மீனாள் அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரர் உதயகுமாருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மீனாள் அம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.