அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு, இப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த புதின், டிரம்பின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ, அமெரிக்கா அந்த வழியில் பேச முடியாது. காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது,” என்று புதின் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவையும், சீனாவையும் கட்டுப்படுத்த, டிரம்ப் பொருளாதார அழுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கடினமான வரலாறுகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட அவர்களின் தலைமையை பலவீனப்படுத்த முயற்சிப்பது ஒரு தவறு, என்றும் புதின் குறிப்பிட்டார். உங்களிடம் 1.5 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற சக்திவாய்ந்த பொருளாதாரங்கள் உள்ளன. அவற்றுக்கும் சொந்த உள்நாட்டு அரசியல் வழிமுறைகளும், சட்டங்களும் உள்ளன.
யாராவது உங்களைத் தண்டிக்கப் போகிறார்கள் என்று சொன்னால், அந்தப் பெரிய நாடுகளின் தலைமை எப்படி எதிர்வினையாற்றும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டாளிகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காலனித்துவ சகாப்தத்தைப் பிரதிபலிப்பதாகவும், அது காலாவதியாகிவிட்டது என்றும் புதின் கூறினார். “இறுதியில், எல்லாம் சரியாகி, மீண்டும் ஒரு சாதாரண அரசியல் உரையாடலைக் காண்போம்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு டிரம்பின் பதில் என்ன?
புதினின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, டிரம்ப் தனது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக, இந்தியா மீது இரண்டாம் நிலைத் தடைகளை விதித்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் இன்னும் இரண்டாம் கட்டத்திற்கோ, அல்லது மூன்றாம் கட்டத்திற்கோ செல்லவில்லை. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை என்று நீங்கள் கூறும்போது, நீங்களே ஒரு புதிய வேலையைப் பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறி, இந்தியா மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.