பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6,11 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேப்போல், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
இந்தநிலையில், பீகாரில் மதுவிலக்கால் 28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மது அருந்துவதற்கும், விற்பனைக்கும் உள்ள தடையை உடனே நீக்குவோம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 28 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சேமிக்க முடியும். அதை பயன்படுத்தி உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் 5 லட்சம் கோடி முதல் 6 லட்சம் கோடி வரை கடன் பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
