நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவிருக்கிறார். இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து, வரிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண முயற்சிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் அதே சமயம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேசுவதும் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து, வரிகள் குறித்து ஒரு பொதுவான முடிவுக்கு வருவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம். மேலும் இது இரு தலைவர்களும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மட்டுமல்லாமல் இந்த சந்திப்புக்குப் பின்னர் இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பில் தளர்வுகள் இருக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.