பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஜாய் இ-பைக் போன்ற நிறுவனங்கள் தங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக வாகன வட்டாரங்கள் கூறுகின்றன.
புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் இந்த பிரிவை பாதிக்காததால், வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பெறும் வரிச்சலுகைகள் மற்றும் அரசு மானியங்களின் பலன்களும் தொடர்ந்து கிடைக்கின்றன. மேலும், சில மாநிலங்களில் ஆர்டிஓ கட்டணம் முற்றிலும் விலக்கப்பட்டுள்ள நிலையில், காப்பீட்டு செலவுகளும் குறைவாக இருப்பதால் எலக்ட்ரிக் வாகனங்கள் எளிதில் வாங்கக்கூடியதாகியுள்ளன.
ஜாய் இ-பைக் நிறுவனத்தின் வுல்ஃப் 31AH, ஜென் நெக்ஸ்ட் 31AH, நானோ பிளஸ், வுல்ஃப் பிளஸ், நானோ ஈக்கோ, வுல்ஃப் ஈக்கோ போன்ற மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவில் மேம்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பெறும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் தனது ‘முஹுரத் மஹோத்சவ்’ சலுகையின் கீழ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது. உதாரணமாக, S1 X 2kWh ஸ்கூட்டர் ரூ.81,999 இருந்த நிலையில் தற்போது ரூ.49,999-க்கு கிடைக்கிறது. அதேபோல், S1 ப்ரோ பிளஸ் 5.2kWh மாடல் ரூ.1,69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோட்ஸ்டர் X மற்றும் X+ மோட்டார் சைக்கிள்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தள்ளுபடி விகிதம் மாநிலம், நகரம், டீலர், நிறம் மற்றும் மாடலின் அடிப்படையில் மாறுபடலாம். எனவே வாகனம் வாங்கும் முன் அருகிலுள்ள டீலரை அணுகி சலுகைகளை உறுதிப்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.