சாப்பிடக் கற்றுக்கொள்வதற்கான முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உண்பது, குடிப்பது, வாழ்க்கை வாழ்வது போன்றவை உலகளாவிய விஷயங்கள் என்றபோதிலும், பிரெஞ்ச் மக்களின் வாழ்க்கை முறை மாறுபட்டது.
உணவு, ஒயின், புதுப்பாணியான வாழ்க்கை ஆகியவற்றுக்கு பிரான்ஸ் நாடு புகழ்பெற்றது.
2010 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் நாட்டின் உணவை மனிதகுலத்தின் கலாச்சாரப் பாரம்பரியமாக ஐநா சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறந்த பல்கலைக் கழகங்களுள் ஒன்றான சயின்சஸ் போ, BMV என்னும் முதுகலைப் பட்டப் படிப்பை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. போயர், மேங்கர், விவ்ரே என்பதன் சுருக்கமே இந்த டிகிரி. உணவு, பானங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்த டிகிரியின் பாடத்திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தில் பல்வேறு நாடுகளின் உணவுகள், உணவுத் தொழில்நுட்பம், சமையல் முறைகள், அந்த நாடுகளின் விவசாய முறைகள், மக்களின் வாழ்க்கை முறை போன்றவை இடம்பெற்றுள்ளன.
மேலும், தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள், உணவு விமர்சகர்கள், உணவு விநியோகத் தொழிலைச் செய்துவரும் முதலாளிகள் போன்றோரும் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர உள்ளனர்.
இந்தப் படிப்பில் தற்போது 15 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேல், நன்றாக குடிக்கலாம்…நன்றாக சாப்பிடலாம், சிறப்பாக வாழலாம்… கவலையை விடுங்க…