Wednesday, December 17, 2025

போரூர் – பூந்தமல்லி மெட்ரோ! இதுல இப்படியொரு வசதி இருக்கா?

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப பல்வேறு வசதிகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து வருகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை நீளமான பாதைகளில் தற்போது ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழித்தடத்தில் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று பாதுகாப்பு அம்சங்களாகும். பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் போது, தவறி தண்டவாளத்தில் விழும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், சென்னை மெட்ரோ நிர்வாகம் நடைமேடை பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த தடுப்புகள் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் உருவாகும் ரயில் நிலையங்களில் அமைக்கப்பட உள்ளன.

இந்த வகை பாதுகாப்பு தடுப்புகள் தற்போது சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே உள்ளன. உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுவரை இவ்வசதி இல்லை. ஆனால், இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட ரயில் நிலையங்களிலும் ஆள் உயர நடைமேடை தடுப்புகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உருவாகும் ரயில் நிலையங்கள், முதல் கட்டத்தில் இருந்த பெரிய ரயில் நிலையங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவில் வடிவமைக்கப்பட உள்ளன. இதனால் பயணிகள் குறைந்த நேரத்தில் நடைமேடைகளை அடைய முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேபோல், முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் க்யூஆர் கோடு அடிப்படையிலான பயண சீட்டு முறையும், தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைகளும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்திலும் தொடர்ந்து பயன்படுத்தலாம். போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

பயண சீட்டுகளை வாங்குவதற்கும், ரயில் நிலையங்களுக்குள் நுழைவதற்கும் எளிதான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனுடன், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போரூர் – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News