சேலம் மத்திய சிறைக்குள் காகித பந்தில் வைத்து கஞ்சா வீசிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் செல்போன் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வருவதாக அடிக்கடி புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், சிறை வார்டன்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மத்திய சிறையின் பின்பகுதியில் உள்ள 16-வது பிளாக் கழிவறைக்கு அருகில் காகித பந்து ஒன்று கிடந்துள்ளது.
இதனை சிறை வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, அதில் செல்போன் சார்ஜர் மற்றும் 45 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த கஞ்சா வைக்கப்பட்ட காகிதப் பந்தை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.