Monday, December 23, 2024

கவனக்குறைவால் தவறவிட்ட 6 சவரன் நகை – உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே, கவனக்குறைவால் தவறவிட்ட 6 சவரன் நகையை எடுத்துச் சென்ற நபரிடமிருந்து நகையை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர், கோவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக மீண்டும் பெங்களூரு சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் பகுதியில் 6 பவுன் தங்கச்சங்கிலியை தவற விட்டார்.

ரமேஷ்பாபு தேடியும் நகை கிடைக்காததால், இது குறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கீழே கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு ஒரு நபர் காரில் சென்றது தெரியவந்தது. அந்த கார், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சுங்கக்கட்டண பகுதியில் சென்றதும், கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கார் உள்ளதும் தெரிய வந்தது.

அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதும், ஹரிபிரசாத் என்ற அந்த நபர், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு சென்று நகையை ஒப்படைத்து விட்டு தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். அதனையடுத்து, அத்திப்பள்ளி போலீசாரிடம் இருந்து குமாரபாளையம் போலீசார் நகையை மீட்டு, நகையை கவனக்குறைவால் தவறவிட்ட ரமேஷ் பாபுவிடம் ஒப்படைத்தனர்.

நகையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ரமேஷ்பாபு, நகை மீண்டும் கிடைக்க சிசிடிவி கேமராக்கள் பெரும் உதவியாக இருந்ததால், குமாரபாளையம் காவல் நிலையம் பகுதியில் மற்றவர்களும் பயனடையும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தருவதாக உறுதி அளித்தார்.

Latest news