Tuesday, February 24, 2026

கோடிக் கணக்கில் குவிந்து கிடக்கும் பிஎஃப் பணம்., அரசு எடுத்த முக்கிய முடிவு

தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎஃப் திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு தொகை ஊழியர்கள் தரப்பிலிருந்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎஃப் திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. பென்சன் சலுகைகளும் கிடைக்கின்றன. அவசர காலத்திலும் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட செயலற்ற கணக்குகளில் ரூ.30.52 கோடி தேக்கமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவை விரைவில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தரப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் சமீபத்திய மறுஆய்வுக் கூட்டத்தில், 7.11 லட்சம் செயலற்ற கணக்குகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கணக்குகள் ஒவ்வொன்றிலும் ரூ. 1000 அல்லது அதற்கும் குறைவான இருப்புத் தொகை உள்ளது.

செயலற்ற பிஎஃப் கணக்குகளில் மொத்தம் ரூ. 10,903 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், ரூ. 1000 வரை இருப்பு வைத்திருக்கும் 7 லட்சம் கணக்குகளில் ரூ. 30.52 கோடி தொகை உள்ளது. இது முன்னுரிமை அடிப்படையில் திருப்பித் தரப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளில் உள்ள இந்த பிஎஃப் தொகை நேரடியாக அந்தந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்றும், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் பணம் நாமினிக்கு அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News