ஒரே ஒரு வருடத்தில், இந்தியர்களிடமிருந்து சைபர் திருடர்கள் கொள்ளையடித்த பணம் எவ்வளவு தெரியுமா? 23,000 கோடி ரூபாய். இது சென்ற வருடத்தை விட மூன்று மடங்கு அதிகம். 2022-ஆம் ஆண்டை விட பத்து மடங்கு அதிகம். இதே வேகத்தில் போனால், இந்த ஆண்டு நாம் இழக்கப்போகும் தொகை 1.2 லட்சம் கோடியைத் தாண்டும் என்று இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் எச்சரித்துள்ளது.
யார் இந்த சைபர் திருடர்கள்? எப்படி நம் பணத்தை இவ்வளவு சுலபமாகத் திருடுகிறார்கள்? வாங்க, இதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளைப் பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணம், Paytm, PhonePe போன்ற UPI செயலிகளின் அபரிமிதமான வளர்ச்சிதான். கொரோனா காலத்திற்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. ஜூன் 2025-ல் மட்டும், சுமார் 190 லட்சம் கோடி ரூபாய் UPI மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி ஒருபக்கம் நல்லதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அது சைபர் திருடர்களுக்கு ஒரு பெரிய தங்கச் சுரங்கமாக மாறிவிட்டது. அவர்கள் இப்போது முன்பை விட புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும் மாறிவிட்டார்கள்.
Phishing செய்திகள் மூலமாக : அதாவது, அமேசான், ஃபிளிப்கார்டில் பரிசு விழுந்திருப்பதாகவோ, அல்லது பணம் ரீஃபண்ட் செய்வதாகவோ உங்களுக்கு மெசேஜ் வரும். அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் பேங்க் விவரங்கள் திருடப்படும்.
அடுத்தது போலி விளம்பரங்கள்: இதில் நம்ப முடியாத குறைந்த விலையில் பொருட்களை விளம்பரம் செய்வார்கள். நீங்கள் பணம் செலுத்தியதும், அந்த நபர் மாயமாகி விடுவார்.
முக்கியமாக AI மற்றும் Deepfake, இந்த வகையான மோசடியில் உங்கள் நம்பிக்கையைப் பெற, பிரபலங்களின் முகத்தை வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கி, உங்களை முதலீடு செய்யச் சொல்லி ஏமாற்றுவார்கள்.
வங்கி மோசடிகள் மட்டும் கடந்த ஆண்டை விட எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதில், தனியார் வங்கி வாடிக்கையாளர்களே அதிகம் ஏமாற்றப்பட்டாலும், பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள்தான் அதிக பணத்தை இழந்திருக்கிறார்கள்.
இவர்கள் எங்கே இருந்து தாக்குகிறார்கள்?
அதிகமாக, வாட்ஸ்அப் மூலமாகத்தான். ஜனவரி 2024-ல் மட்டும், வாட்ஸ்அப்பில் 15,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் அவர்களின் முக்கிய தளங்களாக இருக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்கள் தங்களை ‘தளம்’ என்று கூறி, பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கின்றன.
ஆன்லைனில் நாம் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
தெரியாத நபர்களிடமிருந்து வரும் லிங்குகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
அதிக ஆசை காட்டும் முதலீட்டுத் திட்டங்களை நம்பாதீர்கள்.
முக்கியமாக உங்கள் UPI பின், பாஸ்வேர்டு போன்றவற்றை யாரிடமும் பகிராதீர்கள்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், விழிப்புணர்வு ஒன்றுதான் நம் பணத்தைக் காப்பாற்றும் ஒரே ஆயுதம்.