“திரைக்கதை மன்னன்” பாக்யராஜ் மறைவு… வாழ்க்கை வரலாறு…

ஒரு காலத்தில் பாட்டி சொல்லும் கதைகளைக் கேட்டு வளர்ந்த தலைமுறை இருந்தது. இன்று அந்த இடத்தை மொபைல் போன்களும், யூடியூப்பும் பிடித்துவிட்டன. ஆனால் தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளுக்கு கதை சொல்லியவர் என்றால் அது கே. பாக்யராஜ் தான். ஒரு சாதாரண சம்பவத்தைக்கூட சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றும் அபூர்வ திறமையால் அவர் “திரைக்கதை மன்னன்” என்ற பெருமையைப் பெற்றார்.

இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராகத் தொடங்கிய பாக்யராஜ், அவராலேயே புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பாலும், எளிமையான ஆனால் ஆழமான வசனங்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். “பூவைப் பறிச்சிட்டா மட்டும் வாடிடும்னு நினைக்காதீங்க… செடியிலே விட்டு வச்சாலும் வாடிடும்” என்ற வசனம் இன்றும் பலரின் நினைவில் வாழ்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்திலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் பாக்யராஜ். தூறல் நின்னு போச்சு, மெளன கீதங்கள், டார்லிங் டார்லிங், அந்த 7 நாட்கள் போன்ற படங்கள் அவரது திரைக்கதை திறனை வெளிப்படுத்தும் சிறந்த படைப்புகள். குறிப்பாக அந்த 7 நாட்கள் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இன்று வரை தமிழ் சினிமாவின் சிறந்த முடிவுகளில் ஒன்றாக பேசப்படுகிறது. “என் காதலி உங்களுக்கு மனைவியாக வரலாம்; ஆனால் உங்கள் மனைவி எனக்கு காதலியாக வரமாட்டாள்” என்ற வசனம் அந்தக் கதாபாத்திரத்தின் உயர்ந்த மனநிலையை வெளிப்படுத்தியது.

அவரது திரைப்படங்களில் நகைச்சுவை என்பது வெறும் சிரிப்புக்காக மட்டுமல்ல; கதையின் ஓட்டத்தோடு இயல்பாக கலந்து வரும் ஒரு அங்கமாக இருக்கும். குடும்ப உறவுகள், காதல், சமூகப் பிரச்சினைகள், கிராமத்து வாழ்க்கை, கணவன்-மனைவி உறவுகள் என அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லும் திறமை அவருக்கே உரியது. பழமொழிகளைக் கூட புதிய கோணத்தில் மாற்றி எழுதிய அவரது வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தமிழைத் தாண்டி, அமிதாப் பச்சன் நடித்த ஆக்ரி ரஸ்தா என்ற இந்திப் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.

இந்த நிலையில், கே. பாக்யராஜின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும், அவர் சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த ஐம்பது ஆண்டுகளாக நீளும் அவரது திரைப்பயணம் எண்ணற்ற கதாபாத்திரங்களையும் மறக்க முடியாத வசனங்களையும் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. மங்களம், வசந்தி, பாலக்காட்டு மாதவன், டைலர் காளியண்ணன், சிஷ்யன் கோபி போன்ற அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கின்றன. காலம் மாறினாலும், பாக்யராஜின் திரைக்கதை மந்திரமும் கதை சொல்லும் பாணியும் என்றும் அழியாத தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவே இருக்கும்.

Related News

Latest News