ரயில்களில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது. ரயில்களில் ஏசி பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த போர்வை, துண்டு, படுக்கை விரிப்பு போன்றவற்றை பயணிகள் ரயில் பயணத்தின் போது மட்டுமே இலவசமாக பயன்படுத்த அனுமதி உள்ளது. பயணம் முடிந்து ரயிலில் இருந்து இறங்கி செல்லும் போது அவை அனைத்தையும் ரயிலிலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும். ஆனால் சில பயணிகள் அதனை அப்படியே வீட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும், ரயில்வேக்கு இதனால் கணிசமான அளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாலும், இதனை தடுக்க தற்போது ரயில்வே அதிரடி நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது.
அதாவது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு பயன்படுத்த வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு ஆகியன அதே எண்ணிக்கையில் இருக்கின்றதா? என்பதை கண்காணிக்க ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை பயணிகள் எடுத்து செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வே சொத்து சட்டம் 1966-ன் படி, ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம். இவ்வாறு எடுத்து செல்லும் பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும்.
