இப்போது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது!
2024-25 கல்வியாண்டில், ஜூன் மாதம் முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் “பள்ளியிலேயே ஆதார் பதிவு” திட்டத்தின் கீழ், 5 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டாயமாகிறது.
இதன் நோக்கம் – மாணவர்கள் பள்ளிக்குச் சேரும் போதே ஆதார் பதிவு பூர்த்தியாகி, பிறகு வங்கி கணக்குகள் தொடங்குதல், அரசுத் திட்ட உதவிகள் பெறுதல் போன்றவை எளிதாகவும் தாமதமின்றியும் நடைபெறவேண்டும் என்பதுதான்.
ஆனால், இப்போது ஒரு பெரிய சிக்கல் வந்திருக்கிறது.
பல மாணவர்களின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்யப்படவில்லை. அதுவும் சிறிய வயதினருக்கு அதாவது 5 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு இந்த அப்டேட் அவசியம். ஆதாரை புதுப்பிக்க நாள் முழுக்க இ-சேவை மையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனால், பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை பயன்படுத்தி, இந்த ஆதார் புதுப்பிப்பை முடிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறது.
அரசின் வழிகாட்டலின் படி, பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அருகிலுள்ள இ-சேவை மையம், அஞ்சலகம் அல்லது வட்டார வள மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொண்டு சென்று, ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும்.
இந்த அப்டேட் இல்லாமல், வங்கி கணக்குகள், அரசு நலத்திட்டங்கள் போன்ற பல முக்கிய செயல்கள் தாமதமாகும். அதனால், எந்த குழந்தைக்கும் இதுவொரு தடையாக மாறாமல், பெற்றோர் இது குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
இது மட்டுமல்ல, புதிய சேர்க்கை பெறும் மாணவர்களும், சேரும் நேரத்திலேயே ஆதார் பதிவு மற்றும் பயோமெட்ரிக் அப்டேட் செய்து விட வேண்டும்.
இதன் மூலம், அரசு செயல்பாடுகளில் தாமதமின்றி நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு நேராக பயனடைய முடியும்.